Monday 4 March 2013

பாரதிக்கு ஒரு கடிதம்..!!!



பாரதிக்கு ஒரு கடிதம்..!!!

நான் விட்டுப்போன 
வேலைகள் பல 
கிடப்பில் கிடக்க 
எனக்கு ஏன் கடிதம்
எழுதுகிறான் இந்த
பித்தன் என்று கோபப்படாதே
மகா கவியே..!

சில சந்தேகங்கள் கேட்டு
சில யோசனை கேட்டு
சில முடிவு கேட்டு..
எழுதுகிறேன் இக்கடிதம்
தீர்க்க முடிந்தவன்
நீ மட்டுமே..!!
தீர்ப்பு தெரிந்தவனும்
நீ மட்டுமே...!!

தனியொரு மனிதனுக்கு
உணவில்லை எனில்
இந்த ஜெகத்தினை
அழித்திடுவோம் என்றாய்..!
தமிழனுக்கு தண்ணீர்
தர மறுத்தால்
நாங்கள் என்ன செய்ய...??

வரப்போகும் தலைமுறையை
ஊனமாக்கிவிட்டு...
என் பேதை மக்களுக்கு
மின்சார ஆசை காட்டும்
முட்டாள் மந்திரிகளை
என்ன செய்ய..??

சிங்கள தீவிற்க்கொரு
பாலம் அமைப்போம் என்றாய்
நம் இனம் அழிக்கப்பட்டு
பசியாறினான் சிங்களன் ..
சிங்கள தீவிற்கு
பாலம் கட்டலாமா...??
பாசம் காட்டலாமா..??
பாடை கட்டலாமா..??
என்ன செய்ய நாங்கள்..???

ரௌத்திரம் பழகு என்றாய்
கோத்திரம் பழகுகிறார்கள்
சில மக்கள்
என்ன செய்ய நாங்கள்..??

சாதிகள் இல்லையென்றாய்
சாதி இல்லையென்றால்
பாதி நாடு இருக்காது இங்கு..!!

காமராசர்,
முத்துராமலிங்கர்
அம்பேத்கர்
போன்ற மா மனிதர்களையும்
சாதிவாரியாக பார்க்கும்
குப்பை சமூகமாகத்தான்
இருக்கிறது இன்னும்,
என்ன செய்ய நாங்கள்...!

சாதிக்க வேண்டிய
மாணவர்கள் இன்று
சண்டியராக நினைக்கிறார்கள்
நாங்க என்ன செய்ய..??

வாக்கு கொடுத்துவிட்டு
போக்குமாறி போகும்
போலி மனிதர்களை
அதான் அரசியல் வியாதிகளை
என்ன செய்ய..?

தீர்த்தக் கரையினில்
கண்ணம்மாவிற்காக
காத்திருந்தாய் நீ..
இன்று இடிந்தகரையில்
விடியலுக்கு காத்திருக்கும்
இடிந்துபோன இதயங்களுக்கு
என்ன சேதி சொல்ல நாங்கள்..??

உண்மைக்காக உயிர்விட
துணிந்தாய் நீ..!
ஊழலுக்காக உண்மையை
விற்கும்
உத்தம அரசியல்வாதிகளை
என்ன செய்ய நாங்கள்..?

நேர்பட பேசு என்றாய்
நேர்பட பேசினால்
இந்திய
இறையாண்மைக்கு பங்கமாம்
என்ன செய்ய நாங்கள்..???

அச்சமில்லை என்றாய்
எதுவும் எங்களுக்கு
மிச்சமில்லாமல்
சுரண்டிக்கொண்டு போகிறார்கள்..
என்ன செய்ய வேண்டும் நாங்கள்..!

ஒரு காலம் கடந்த
வேண்டுகோள் உன்னிடம்
கவிதையை கையில்
எடுத்த நீ
அரசியலை கையில்
எடுத்திருந்தால்
எங்களுக்கு இந்த நிலை
வந்திருக்காது...!!

இரண்டு வழி
உண்டு தலைவா
ஒன்று
அங்கிருந்து வழிநடத்து
அல்லது
மீண்டும் பிறந்து வா...

இங்கு பாரதி பித்தர்கள்
ஏராளம்
நாம் நல்லதொரு
அரசியல் படைப்போம்...!!!

விரைவில்
" புரட்சி" வெடிப்பது மட்டும்
சத்தியம்...!!!

- இளையபாரதி

No comments:

Post a Comment