Saturday 18 March 2017

அம்மா..!

"அம்மா "

எப்படி எல்லாம்
என்னை வளர்த்தாய்  அம்மா...!!

முதல் கவிதை
நான் எழுதி
முதன் முதலாய்
உனக்கு காண்பிக்க
முத்தாக இருக்கு என்றாய்...

மூக்குசளி ஒழுகும்
உன் மகன் எனக்கு 
முந்தாணியில் நீ
துடைத்துவிட்ட....
உன் முந்தாணி  வாசம்
என் கை குட்டையில்
இல்லை அம்மா...

மிட்டாய்  வாங்க 
ரூபாய் கேட்டால்
என்னை அலைகழித்து
மசாலா பெட்டி திறந்து
நீ கொடுத்த
ஒற்றை நாணயத்தின்
வாசமே  தனி...அம்மா

மறுநாள் நாணயம்
இடம்  மாறி
"டீ" பொடி பெட்டியில்
இடம் பிடித்தது.....
அது வேறு சேதி...

என் பள்ளியில்
மாறு வேடப்போட்டி
நடக்க
பாரதியின் வேடம் போட
அப்பாவின் வேட்டி கட்டி..
அண்ணாவின் கருப்பு
கோட்டை  போட்டு விட்டாய்..
முழுமையடையாத
குட்டி பாரதியை..
உன் கண் "மை" கொண்டு 
மீசை வரைந்தல்லவா
முழுமையாக்கினாய் நீ...!!!

நடு நிசியில்
வேலை முடித்து
நான் வர
பசிக்குதம்மா  என்று
நான் சொல்ல
பசி தாங்க மாட்டான்
பிள்ளை என்று
பதறிப்போய்
மொறு மொறுன்னு
நீ சுட்ட தோசை
ஐயோ ..அம்மா...!!!

அடுத்த வீட்டு பையனோடு
அனுதினமும் நான்
சண்டை போட...
அன்பால் இது
ஆகாதுன்னு
அடுப்படி கரண்டியை
அனலில் வைத்து
அப்படியே எனக்கு
சூடு போட்டாய்...
அழுதது என்னவோ...நான்தான்
ஆனால் எரிந்தது
நீ தான்  அம்மா...!!!

நொந்துப்போன உன்னை
பார்த்தது, எனக்கு
நோய் வந்த போது அம்மா...

நோய் நொடி வந்தபோதும் 
நொடிப்   பொழுதும்
நீ உறங்கவில்லை அம்மா..!

அம்மை போட்டு
நான் கிடக்க
பத்தியம் இருந்த
பத்தினி தாயே...!

உன் மடியில்
என் தலை சாய்த்து
மஞ்சள் கரை படிந்த
உன் கைகளால்
தலை வருடிய
உன் விரல்களை
நான் தேடுறேன் அம்மா...!

ஆத்திகம் நீ பேச
நாத்திகம் நான் பேச..
குட்டி குட்டி
பட்டி மன்றங்கள்..
தீர்ப்பு வழங்கும்
நடுவரும் 
நீதானே  அம்மா... !!

நீ போடும்
அந்த
எட்டு புள்ளி கோலம்
எத்தனை நேரம்
பார்க்கலாம் அம்மா...!!!

விரல் பிடித்து
அப்பா நடக்க
விடுங்க அவனைன்னு
இடையில்  சுமந்து
நடந்த தாயே...!!!

நிலாச்சோறு
உருண்டை உருட்டி..
உருண்டை மேலே
கத்திரிக்காய் பொரியல் வைத்து
சிந்தாம சாப்பிடு
என்று நீ சொல்ல....
சாப்பாடு சிந்தவில்லை
கண்ணீர் அல்லவா
சிந்தினேன் நான்...!!

வெளி நாட்டு  
வேலைக்கு நான் செல்ல...
குடும்ப கண்கள்
அத்தனையும்
கலங்கி நிற்க...
" கலங்காதிரு மகனே "என்று
கலங்காத கண்களோடு
என்னை வழி அனுப்பி...
திரும்பி நின்று
உன் கண்ணீர் துடைத்த
உன் முந்தாணி
எனக்கு செய்தி சொன்னதம்மா...!!
உன் தலையணை
இன்னமும் எனக்கு
சொல்கிறதம்மா...!!

                                             - இளையபாரதி