Monday, 30 April 2012

உழைப்பாளி..!!!உழைப்பாளி..!!!

இவன்
இன்றி அசையாது உலகு
இவன்  ஊன் சிதைத்து
முதலாளிக்கு
லாபம் கொடுக்கிறான்...

பாவம் இவன்
கனவில் மட்டுமே
வாழ்கிறான்.,
பிள்ளைக்கு படிப்பு வாங்க
இவன்  ரத்தம் விற்கிறான்,

இவன்  தேவை
என்னவென்று தெரியாதே
இவனுக்கு...

இவன்  வாழ்வை
பலி கொடுத்து
பலரை வாழ வைக்கிறான்...!!!

குடும்பத்திற்கும்
நாட்டிற்கும்
வாழ்பவன் இவன்
இவன் வாழ்கையை
உழைத்தே கழிக்கிறான்
உழைப்பாளியை
உண்மையாய்
வணகுவோம்...
உழைத்திடுவோம்...!!!
உழைத்திடுவோம்...!!!

                            - இளையபாரதி

மயங்கினேன்..!!!எனக்கு
கடவுள் நம்பிக்கை
இல்லை என்றாலும்..,
நீ
கோவிலுக்கு செல்கையில்..,
உன்னை
பின்தொடர்ந்து வந்தேன்...,
நீ
சாமியை பார்த்து
வணங்கினாய்..,
நான்
உன்னை
பார்த்து
மயங்கினேன்...!
நீ
உன் நெற்றியில்
திருநீறு பூசினாய்..!
நானும் பூசினேன்
என் நெற்றியில்
நீ உதறிவிட்ட
பாத மணல்களை...!!!

                             - இளையபாரதி

உனக்கான என் உலகம் ...!!!உனக்கானதொரு
உலகத்தை
என் உள்ளத்தில்,
எழுப்பி  வைத்து
காத்து கிடந்தேன்,

கை கோர்க்க மறுத்தாய்,
என்னை கடந்து
போனாய்,
கடை விழி பார்வையேனும்
கிடைக்காதா என்று
யாசிக்கும் யாசகன்
ஆனேன் நான்..!

ஏந்திய என் கைகளில்
நீட்டினாய் உன்
அழைப்பிதழை,

விரைவில்
உனக்கு திருமணம்...!!!
அன்று
எனக்கு மறுஜென்மம்..!!!

உனக்காக
எழுப்பிய உலகத்தை
உன் கணவனிடம்
கொடுக்கிறேன்
அவர் உனக்கு கொடுப்பார்..!
மாற்றங்கள் செய்ய வேண்டாம்
என்று சொல்..!!!

உன் தாயை விட
உன் தனித்தன்மை
அறிந்தவன் நான்...

அந்த உலகத்தில்
நீ
விரும்பிய அனைத்தும்
இருக்கும்...
நம் காதலை தவிர..
நம் காதல் இல்லாத
இடத்தில்
எனக்கென்ன வேலை...???

உன் திருமணத்தோடு
மறித்துபோவேன் நான்..

ஆம்
உன் உற்றார்களுக்கும்,உறவினர்களுக்கும்,
நண்பர்களுக்கும்,
அங்கு இலைகளில்
பரிமாறப்பட இருப்பது
என் உயிர்...!!!
நீ
ஏற்கனவே ருசித்துவிட்டாய்
உன்
கணவனுக்கு
ருசிக்க கொடு
என் உயிரை...!!!

                               - இளையபாரதி

Sunday, 29 April 2012

என்னை கட்டிக்கொள்கிறேன்..!!!
குழந்தை பருவத்தில்
கட்டிப் போட்டு
வளர்க்கப்பட்டவனாம்
நான்...!
இன்று..,
நானே
என்,
மனதை
கட்டிப் போடுகிறேன்
உன்,
கணவனிடம்
நாம்
காதலித்த கதையை
சொல்லிவிட கூடாதென்று....!!!

                                     - இளையபாரதி

Friday, 27 April 2012

கடவுள்..!!! யார் கடவுள்...???

கடவுள்..!!!

இருக்கிறாரா இவர்..?

கடவுள் இருக்கிறார்.!
அவர் எந்த மதத்தை,
சார்ந்தவராகவும் இல்லை
கடவுள்,
கடவுளாகவே இருக்கிறார்...!!!

நானும் பார்த்தேன்
கடவுளை...!!!

பேதம் இன்றி அனைவரையும்
ஏற்றி செல்லும்
பேருந்தில்...!!!

ஒரே மாதிரி
வழி கொடுக்கும்
சாலைகளில்..!!!

ஒரே நிறமாய் இருக்கும்
தண்ணீரில்...!!!

மனிதனாக மட்டும்
நம்மை பார்க்கும்
நம் நாட்டு
தேநீர் கடை
கோப்பைகளில்...!!!


கருங்களுக்கு
பால் ஊற்றி பூசாரி
அபிஷேகம் செய்கையில்
கீழ்வழியும் பாலை
கையில் பிடித்து
குடித்த அந்த யாசகன்
கண்டான்
பூசாரியில் கடவுளை...
பூசாரியோ கண்டார்
கல்லில் கடவுளை.!!!

உணவு கேட்ட,
சிறுவனுக்கு உணவு
கொடுத்து விட்டு
நான் விடைபெறுகையில்
"அண்ணா அங்க இருட்டா
இருக்கு பார்த்து போங்க "
என்ற அந்த சிறுவனிடம்
கண்டேன் நான்
கடவுளை..!!!

கடவுள்
இருக்கிறார் என்றால்,
யார் அவர்
ஏசுவா..?
சிவனா..?
அல்லாவா...?
இவர்கள் கடவுள் என்றால்...
கடவுளை
என்ன சொல்வீர்கள்..?

இங்கே தங்கத்திற்கு
கொடுக்கப்படும்
மரியாதை...,
நமக்கு பெரிதும் உதவும்
இரும்பிற்கு தருவதில்லை...!!!

கடவுள், பணம்
கடவுள் ஒரு கல்...
பணம் வெறும் காகிதம்..
இரண்டுமே
மனிதனால் மதிப்பு
கொடுக்கப்பட்டு...
மதிக்க படுபவைகள்...
ஒரு நாள்
மிதிக்கப்படலாம்...விரைவில்...!!!

கடவுள் இருக்கிறார்.!
அவர் எந்த மதத்தை,
சார்ந்தவராகவும் இல்லை
கடவுள்,
கடவுளாகவே இருக்கிறார்...!!!

அப்படியானால்
யார் கடவுள்...????

உனக்கு நீ
எனக்கு நான்...!!!

                                   - இளையபாரதி
Friday, 20 April 2012

நீ வாழ்க..!!! காதலியே...!!!
காதலியே...!!!

உனக்கு திருமணமாமே..!!!
வாழ்த்துக்கள்..,

காளையன் கை பிடித்து
நீ என்னை கடந்து செல்வாய்..,
என் உயிரின்
நிழலான உன்
நினைவுகளை
நான்
என்ன செய்ய காதலியே ..?

உன் திருமண
அழைப்பிதழ் பார்த்தேன்
அருமை
நாம் தேர்வு செய்த
நம் திருமண அழைபிதழையே
தேர்வு செய்திருக்கிறாயே..
இன்னும் உன் மனதின் ஓரம்
நான் ஒட்டி இருக்கிறேன்
போலிருக்கிறது...,
அறுத்து எறிந்துவிடு...!


கைகோர்த்து கடலோடு
விளையாடி கவலை
மறந்த பொழுதுகள்
இனி...எப்போது.?
எப்போது என்ற கேள்வி ஏது..?
இனி கிடையாது..!!!

ஆனாலும்
உன் மனம் பிடித்தவனும்
உன் மனதிற்கு பிடித்தவனும்
பித்தன் நான்தானே...!!!

நீ எடுத்துவிட்ட
கோணல் வகுடில்தான்
இன்றும் தலை
வாரிக்கொண்டிருக்கிறேன்
நான்..!

நீ கொடுத்துவிட்டு போன
கோணல் வாழ்கையை மட்டும்
சரி செய்கிறேன்...!!!

நீ போன சோகத்தில்
புகைக்கவில்லை
குடிக்கவில்லை
நான்
பிணத்திற்கு எதற்கு
இவைகள்..???

நான் இறந்தால்
என்
முகம் பார்க்க வராதே
எனதருமை காதலியே..,
என் இறுதி ஊர்வலத்தில்
" மலர்கள் " வேண்டாம் என்று
பிரகடனப்படுத்தி இருக்கிறேன்...!!!

உன் குழதைக்கு
என் பெயர் வைக்காதே..!
உன் வீட்டு
நாய்க்கு வை
என் பெயரை...!!!
நாம் ஒன்றாக
இருந்தபோதும்
அப்படிதானே
இருந்தேன் நான்.!

ஒன்று மட்டும்
உண்மை..!
உன்னை போல்
காதலன் அல்லாது
பிறரை திருமணம்
செய்யும் பெண்கள்..!!!
முழு மனதோடு
செய்வதில்லை திருமணங்களை..!!!

காதலித்தவரை
திருமணம் செய்யாதோர்
இருக்கும் வரை...!

மெல்ல தமிழ் மட்டும்
இனி  சாகாது..!!
மெல்ல " தமிழ் பண்பாடு "..!!
இனி சாகும்..!!
மெல்ல " காதலும் "
இனி சாகும்..!!
என் காதலும்
" சாகட்டும் "...!!!
ஆனால் சாகாது
சாபமிட்டால்
சாவது அல்ல
" காதல் "...!!!

வாழ்க நீ
என்
வாழ்க்கைக்கு முன்னுரை
எழுதிய
நீ வாழ்க..!!!

                                        - இளையபாரதிTuesday, 10 April 2012
நீ,
உதவாது
வேண்டாம்...என்று
தூக்கிப்போட்ட
காகிதத்தில் தான்
எழுதினேன்
உனக்கான
என்,
முதல்
கவிதையை...!!
     

                            - இளையபாரதி

Monday, 2 April 2012

முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!
முதியோர் இல்லத்து முதியவரின் முற்றிய வலிகள்...!!!

தவமிருந்துதான் பெற்றோம்
உன்னை,
தடுமாறி வாழ்கை நடத்தியபோதும்
தனித்தன்மையாய் வளர்த்தோம்,

உன் எச்சில் பட்ட
என் கண்ணங்கள்
இன்னும் குளிருதாடா..!மகனே...

உன் மழலை புன்னகையை
பிச்சை கேட்டு
பல நாட்கள் உன்னிடம்
மண்டியிட்டிருக்கிறேன் ,
என் செல்ல மகனே...,

உன் பால் வாசத்தில்
என் பாசம் உணர்ந்தேன்,

நீ கடித்து காயபடுத்திய
என் கன்னத்து தழும்பை
இன்னமும் முத்தமிடுகிறாள்
உன் அம்மா...!

என் கிழிந்த வேட்டியை
மறைத்து,மடித்து கட்டி
வேட்டி வாங்கும்
பணத்தில் வாங்கியதுதான்
உன் வெள்ளி பாலாடை...!
என் அன்பு மகனே..!

முதல் முறை
நீ பள்ளி செல்லும்போது
உன்னை மருத்துவனாகதான்
பார்த்தேன் இந்த பாவி..,

கல்லூரி செல்லும்போது
கர்வத்தோடு பார்த்தேன்...,

மணக்கோலத்தில் உன்னை
பார்த்தபோதுதான்,
உயிருடன் மோட்சமான
முதல் மனிதனானேன்..,

என் கடமை முடிந்தது
என் அன்பு மகனே...!

ஓர் இரவு,
வீட்டில் படுத்துவிட்டு
விழித்து பார்த்தால்,
நானும் உன் தாயும்
கிடந்தது
"முதியோர் இல்ல" வாசலில்...,

பேர பிள்ளைகள்
உதைக்க காத்திருந்த
மார்பில்,
நீ உதைத்ததெப்படி..?
என் செல்ல மகனே..!
என் மகன் இப்படி ஆனதெப்படி..?

உன் தாய்
கொடுத்த பால்
விஷமானதெப்படி..?

என் மேல் சிந்திய
உன் எச்சில்
அமிலம் ஆனதெப்படி..?

போதும் மகனே போதும்..!

உயிரை கொல்பவன் மட்டும்
கொலைகாரன் அல்ல...
உணர்வை கொல்பவனும்தான்..,

நீ கொலைகாரன் ஆனதெப்படி...?

நீ செய்ததை
என் உடல் தாங்கும்...
என் உள்ளம் தாங்காது..

நான் தாங்குவேன்
உன் தாய்
தாங்கமாட்டாள்...!
பாலூட்டியவளாயிற்றே...!!!

மகனே..!
வாரம் ஒருமுறை
என் பேரப்பிள்ளைகளை
கூட்டி வா..,
இவர்கள்தான் "தாத்தா பாட்டி"என்று
அறிமுகம் செய்,

"தாத்தா பாட்டி சாமிகிட்ட போய்டாங்க",
என்று கூறி எங்களை
உயிரோடு எரிக்காதே...!

எங்கள் நிலை பார்த்து
உன் பிள்ளைகள்
வளர்ந்தால்தான்,
நீ எங்கள் நிலைக்கு
வராமல் இருப்பாய்..!!!

நீ மிகவும் நல்லவன்
என் செல்ல மகனே..!!!
அனாதையாக எங்களை
விட்டுவிடாமல்,
முதியோர் இல்லத்தில்...
சேர்த்தாயே...!!!

நன்றி மகனே

என் மகன் நல்லவன்...!!!


                                      - இளையபாரதி