Saturday, 27 October 2012

" தாத்தா "...!!!
எண்பது வயதை 
எட்டி பார்த்த 
எங்கள் அரசன் உங்களுக்கு 
ஏட்டில் சொல்வதா வாழ்த்து...??

வாழ்த்து சொல்ல 
வயது இல்லை 
வணங்கிவிட தகுதியும் இல்லை 
வாழ வேண்டும் 
உங்களை போல 
வரம் தாருங்கள் 
வாழ்கையை வாழ்க்கையாய்
வாழ...!!!

கலகல சிரிப்பும் 
கள்ளமில்லா மனமும் 
கலங்கடிக்கும் கம்பீர  குரலும்..
கவர்ந்திழுக்கும் கண்களும் 
கொஞ்சம் 
கடனாய் கொடுங்கள்..!

இறைவன் வழி 
நாங்கள்  நடக்க 
இனியவை கூறும் 
இளமை நாயகன் நீங்கள்...!

பலரும் பட்டு பட்டு 
ஏற்கும் விதியை  
பலரும் பட்டு பட்டு 
ஏற்கும் தலைவிதியை  
நீங்கள் குட்டி  பார்த்து 
வாழ்வது எப்படி...?
ரகசியம் சொல்லுங்கள்...

கைத்தடி வைத்து 
காலம் தள்ளும் 
முதியோர்கள் மத்தியில்...
உங்களை வைத்து
கைத்தடி தன்
காலம் தள்ளும் 
தந்திரம்தான் என்ன...??

முடி நரைத்த பின்னும் 
மண்டியிடாத கம்பீரம்..!
ஆயிரம் அர்த்தங்கள் 
சொல்லும் உங்கள் 
ஆழமான விழிகள்...!

அரைகுறை வாழ்கையை 
வாழும் எங்களை போல 
அற்பமான மனிதர்களுக்கு 
நடுவே..,
அமைதியாய் வாழும் 
மாமனிதர் நீங்கள்...!

தாத்தா என்று அழைத்திட 
நெஞ்சம்  மகிழ்ந்தாலும் 
என்பது வயதானால்  
தாத்தாவா என்ன..?
என்று என் மனம் 
என்னை எச்சரிக்கை 
செய்வதுண்டு...!

தாத்தாவை போல 
நடந்துகொண்டால்தானே 
தாத்தா என்று அழைப்பது..!
வயது முதிர்ந்த இளைஞனை 
தாத்தா என்று எப்படி
அழைப்பது..???

ஆனாலும் தாத்தா 
ஒரு சிறு கோபம்
உங்கள் மீது எனக்கு..!
"பொக்கை வாய் " தாத்தா என்று 
செல்லமாக அழைத்திடும் 
பாக்கியம் எங்களுக்கு 
கொடுக்கவில்லை நீங்கள்..!

ஒன்று செய்துவிட்டு 
ஓராயிரம் பேசும் 
ஒப்பனை மனிதர்கள் நடுவே..
ஒவ்வொரு நொடியும் 
ஒரு நன்மை செய்துவிட்டு 
ஒன்றுமே செய்யாததுபோல் 
ஒதுங்கி வாழும் நீங்கள்.!
ஒற்றனா..? அந்த இறைவனுக்கு..??

உண்மை உலகம் 
காண ஆசைப்படுகிறேன் 
உங்கள் மூக்கு கண்ணாடி 
கொடுங்களேன்..!

பூமிக்கும் வலிக்காத 
உங்கள் நடையை 
தன மீதும் 
நடக்க சொல்கின்றன 
மலர் கூட்டம்....

ஆயிரம் கவி சொன்னாலும் 
அற்பமாகதான் போகும்...
அன்பு தாத்தா உங்கள் 
அன்பின் முன்...!

காதலுக்கு கவி எழுதலாம் 
நட்புக்கு கவி எழுதலாம் 
பாசத்திற்கு கவி எழுதலாம் 
ஆனால் 
மாமனிதர்களுக்கு கவி எழுத 
வார்த்தைகளுடன் போராட 
வேண்டி இருக்கிறது...

முதல் மூச்சு 
ஒருமுறை தான் 
பிறந்த பொது...
உங்களுக்கு இது 
இரண்டாம் முதல் மூச்சு...!!!

தாத்தா  நீங்கள் 
இன்னும் நீண்ட நெடும் தூரம்
எங்களை அழைத்து 
செல்ல வேண்டி இருக்கிறது...
உங்கள் விரல் பிடிக்கிறோம் 
எங்கள் கரம் பிடித்து 
அழைத்து செல்லுங்கள் 
கண் மூடிக்கொண்டு 
வருகிறோம் நீங்கள் செல்லும் 
" பாதையில் "...!!!

                                                 - இளையபாரதி 

Sunday, 14 October 2012
மகாகவியின் நினைவு நாள் 11-09-2012

எங்கு சென்றாய்..?
எம் தலைவா..?
எம்மை தனியே விட்டு..?

உன் எழுத்தாணி முள்
கீறி சென்ற
உன் நெருப்புக் கவிதைகள்..,
என்னை வளர்த்தன.,

உன் வீர நடையில்
விதைக்கப்பட்டது
விடுதலை...!

உன் விழி
கக்கிய நெருப்பு
காற்றை பொசுக்கிய
உன் சுவாசம்...,

கதகதக்கும்
உன் கருப்பு
கோட்டுக்குளே...
உன்னை
கட்டி அனைத்து..
கண் மூடி இருக்க
வேண்டும் நான்..

நீ வாழ்ந்த
காலத்தில் வாழாத..
குறைதான் எனக்கு..!

சரியாக தேர்வு
செய்தது தமிழ் உன்னை..!
தன் இனிமையை
அனைவருக்கும்
விருந்தளிக்கவும்...
தன் ரௌத்திரம்
புரிய வைக்கவும்...!

காலம் சென்றாலும்
காலங்கள் பல கடந்தாலும்
நீ கடைந்தெடுத்த
கவிதைகளை
கரு சுமந்த
தாய் போல..
தமிழ் சுமக்கும்...!!!

" மெல்ல தமிழ் இனி சாகும்"
என்றொரு பேதை உரைத்தான்
என்றாயே தலைவா..!!!
எப்படி சாகும்..???
உன் கவிதைகள்
இருக்கும் வரை..!

தித்திக்கும் " தீ " நீ...!!!

இன்னுமும்
இனிமையாக
கொழுந்துவிட்டு
எரிந்து கொண்டுதான்
இருக்கிறாய்..
எங்கள் இதயங்களில்..!!!

                                  - இளையபாரதி