Thursday 28 May 2015

புத்தனோடு ஓர் உரையாடல்..!


புத்தனோடு ஓர் உரையாடல்..!

கண்களை திற
உன்னிடம் பேசவேண்டும்..
"எதுவாயினும் சொல்
காது கேட்கும் எனக்கு"..
உன் காதுகள் செவிடென்று
நாங்கள் அறிவோம்,
குறிப்பாக நாங்கள்
தமிழர்கள் நன்கு அறிவோம்,..
“செவிடா நானா.? நான் செவிடல்ல,
எனக்கு வலது காது கேட்கும்”
இடக்காது..???
“கேட்காது”..!
சரிதான் ஈழப்போரின்போது
இலங்கையில் இடக்காதைதான் வைத்திருந்தாயோ..?
“வந்த நோக்கம் என்ன.”?
உன் நோக்கம் என்னவென்பதை
தெரிந்துகொள்ள வந்திருக்கிறேன்.,
“உலகில் அமைதி நிலவ வேண்டும்,
அதுவே என் நோக்கம்”,
எப்படி,..? காவி உடையுடுத்தி,
மண்டை மயிரை மழித்து,
சாதுவென்ற பெயரில்
திரிபவரைத் தவிர,மற்ற
மக்களை கொன்று...மயான அமைதி
நிலவ வேண்டும் அதுதானே..!!
அதுதானே உன் நோக்கம்..??
கண்களை திற, நீ குருடனா
என்பதை நான் அறியவேண்டும்,
“அகிமசையை,அமைதியை விரும்பும்
என்னிடம் நீ பேசும் விதம் சரியல்ல..”
அகிம்சையை,அமைதியை விரும்பும்
உனக்கு மனிதக் குருதி எப்படி
பிடித்துப்போனது..??
ஈழத்தில் ருசி கண்ட பூனையாகிப்போய்
பர்மா சென்றிருக்கிறாயா கௌதமா..?
நீ விரும்பியபடி அமைதிதான்
நிலவுகிறது,ஆனால் மயான அமைதி,..!
“நீ சொல்வது விளங்கவில்லை”..
கண்களை திறந்து தொலைக்க மாட்டாய்,
இடக்காதும் செவிடென்றாய்,
உன் மூக்கு சுவாசிப்பதில் ஏதும் பிரச்சனையா..??
“பர்மா” சென்று சுவாசி,
பிணங்கள் எரியும் வாடை வரும்,
இல்லையேல் உன் வலது காதை
பர்மா உள்ள திசையில் திருப்பு,
மரண ஓலங்கள் கேட்கும்..
இத்தனை பேசியும்
கடைசிவரை கண்கள் திறக்கவில்லை
அந்த “புத்தர் சிலை”.
-    இளையபாரதி





Thursday 16 April 2015

நிம்மதியாய் உறங்கி இருப்பார்கள்,


அன்று நிச்சயம் அவர்கள் 
நிம்மதியாய் உறங்கி இருப்பார்கள்,

மூச்சு முட்டியபோதும் 
மூத்திரப்பை சுமந்து
முற்போக்கு பேசிய,
கிழவனின் முகத்தில் 
சிறுநீர் கழித்த நிம்மதியில்,
அன்று நிச்சயம் அவர்கள் 
நிம்மதியாய் உறங்கி இருப்பார்கள்,

தன் முலை மறைக்க 
முடியாமல் 
வீட்டு மூலையில் 
முடங்கிக் கிடந்த
பெண்கள் வீதிக்கு வர 
செருப்பாய் தேய்ந்த 
அந்த கிழவனை 
செருப்பால் அடித்தார்கள்,
அன்று நிச்சயம் அவர்கள் 
நிம்மதியாய் உறங்கி இருப்பார்கள்,

ஆம் அவர்கள் 
அன்று   நிம்மதியாய் 
உறங்கி இருப்பார்கள் 
இன்று நிமதியாய் உறங்குகிறார்கள்,
அடிமைப் போர்வையோடு
நாளைய உறக்கம் விற்று..!!

செருப்பால் அடியுங்கள் 
எச்சில் உமிழுங்கள் 
சிறுநீர் கழியுங்கள் 
மலம் கூட கழியுங்கள்..
பாவம் உங்களுக்கு 
தெரிந்ததை அவைதான் 
செய்யுங்கள் ,

ஒன்று மட்டும் உண்மை 

மூட எண்ணங்கள் 
மூச்சற்றுப்போக 
மூத்திர சட்டி ஏந்திய
ஈரோட்டுக் கிழவன் 
ஈடு இணை இல்லாதவன்..!
தமிழ் வரலாற்றில் 
அழிக்க முடியாதவன்..!!

                                              - இளையபாரதி