Thursday, 6 March 2014

விலைமகள்..!!!



விலைமகள்

வேறு வழி இல்லை
வெறுத்து போன வாழ்க்கையில்,

தினமும் வெந்து சாகிறேன்
என் சமயலறையில் அல்ல
என் மெத்தை அறையில்..!

கணவனுக்காய் கனவு கண்டுவைத்த
அதே மலர் மெத்தையில்
மலடாகிக்கொண்டிருக்கிறது
என் உடலும் உள்ளமும்...!

மானம் காத்து சம்பாதித்த
சிலநூறு ரூபாயில்...
நிறைந்தது என் ஒரு வயிறு மட்டுமே...

குடும்ப வயிறை நிறைக்க
குறுக்கு வழியே  சிறந்ததென்று..
தோளில் தோல் பை மாட்டி...
தோள்களை பின்னிழுத்து..
மார்பை முன்னிறுத்தி..
மானம்கெட்டு நான் நடந்த
அந்த நாளில்...
நான் செத்து போனேன்
என் குடும்பம் வாழ..!

சிறகடித்து பறக்க எண்ணியவள்
சிப்பிக்குள் முத்தாய்,
பொத்தி வைத்த
என் தேகத்தை விற்க துவங்கினேன்..
வற்றாத என் தேகம்
இன்று வரிப்புலியாக..!

வியப்பானதுதான் நம் நாடு
மானம் காத்தால் சிலநூறு
மானம் விற்றால் பல ஆயிரம்..!

மார்பை மறைத்த..
என் முந்தானியில்
விந்துக்கறை இருந்தாலும்..
என்ன இது என்று கேட்க்கும்
துணிவில்லை என் அம்மாவிற்கு..!

மகளின் மானம் போனால் என்ன..?
மது இருந்தால் போதும்
என் தந்தைக்கு..!


ஒவ்வொரு மாதமும்
அந்த மூன்று நாள் மட்டுமே
விடுமுறை எனக்கு...

என்னை போன்ற
பிறவிகளுக்காகதான் பாவம் பார்த்து
கடவுள் கொடுத்திருக்கிறான்
இந்த மூன்று நாட்களை..
எங்கள் பிறப்புறுப்பு  ஓய்வெடுக்க...!


மனம் திறந்து பேசினாலும்
மார்பை பார்க்கும்  இந்த
மன்மதன்கள்...
மனைவியில் இல்லாத
எதை கண்டுவிட்டார்கள்..என்னிடம்..??

என் தொடை இடுக்கில்
தொலைந்துபோன எந்த
ஆண்மகனுக்கும்
தெரியவில்லை...
மனைவியை தவிர்த்து
வேறு மெத்தை
ஏறுபவன்..
" ஆண் " அல்ல என்பது..!!!

                                        - இளையபாரதி
                           











Thursday, 9 January 2014

எடை..!


எடை இயந்திரத்தை
ஏனடி  கோபித்து கொள்கிறாய்.?
உடை இல்லாமல்
"நீ"
எடை பார்த்தால்
அழகு கூடுவதால்
எடையும் கூடத்தானே செய்யும்..??
                               
                                      - இளையபாரதி 

Wednesday, 8 January 2014

" தீ " இட்டு கொல்வதா..??



தமிழை மறந்த
தரம் கெட்ட மனிதருக்கு
தடை ஏதுமில்லாமல்
தரணியில் வாழ இடமுண்டாம்,.!

தமிழனாய் பிறந்து
தரம் இறங்காமல் சிரம் தாழாமல்
தன்மானம் போற்றும்
தரமுள்ள மாந்தருக்கு
தரணியில் வாழ
தகுதி இல்லையாம்..!

தாய் இழந்த பிள்ளைபோலே
தமிழை இழந்து தவிப்பதா..??
தமிழா..?
தமிழ்ச்சாதி பிள்ளைகள்
தாய் இல்லா அனாதைகளாவதா..??

தமிழ் நம் தனித்தமிழ்
தண்ணீரில் போட்ட கோலமாவதா...??
மெல்ல தமிழ் இனி சாவதா..??
தரணியாண்ட நம் தாயை..நம்
தமிழ் தாயை...நாமே
" தீ " இட்டு கொல்வதா..??
நம் தாயை நாமே
" தீ " இட்டு கொல்வதா..??

                               - இளையபாரதி


Monday, 6 January 2014

புத்தகப்பிரியனானேன்


நீ,
கல்லூரி முடிந்து,
உன்,
புத்தகத்தை
கட்டி அனைத்து,
சாலையில்
நடந்து சென்றதை
பார்த்ததில் இருந்துதான்
புத்தகப்பிரியனானேன்
நான்...!
                                    - இளையபாரதி 

Monday, 26 August 2013

பேரழகு♥♥♥


உன் இடையாடும்
நடனம் "அழகு" என்றால்,
உன் விரலாடும்
நடனம் "பேரழகு"
நீ
"மலர்" கோர்க்கையில்.!!!

                       - இளையபாரதி 

Saturday, 3 August 2013

தோற்றுக்கொண்டிருக்கிறேன்


ஆம்
நான்
தோற்றுக்கொண்டிருக்கிறேன்
தினம் தினம்
தோற்றுக்கொண்டிருக்கிறேன்
எப்படியேனும்
ஒரு கவிதை
எழுதிவிடவேண்டும் என்று
உன்னை விட
அழகாய்,அற்புதமாய்..!♥♥♥

                                     - இளையபாரதி 

Thursday, 1 August 2013

வா காதலியே..!♥♥♥



வா காதலியே ..!♥♥♥
உன் மேல் சாதி
தந்தையும்
என் கீழ் சாதி
தந்தையும்
அரிவாளோடு வரட்டும்..
அரிவாள் பிடுங்கி
நம் அறிவால்
சாதி விறகு கொளுத்தி
நம்  காதல்
சமைப்போம்
வா காதலியே..!♥♥♥

                                        - இளையபாரதி

Tuesday, 30 July 2013

எரித்துவிட்டு போ



என்னை தூக்கி
எறிந்துவிட்டு போகாமல்
என்னை தூக்கி
எரித்துவிட்டு போய் இருக்கலாம் ..!!
நீ..!!!

                                  - இளையபாரதி

Saturday, 6 July 2013

இளவரசன்


தமிழ் மொழி  ஊனமானது
வார்த்தை ஒன்றுமில்லாமல்..
எந்த வார்த்தை சொல்லி
ஈடு செய்ய முடியும் தமிழால்
இளவரசன் இல்லாமல் போனதை

கேடுகெட்ட சமூகத்தின்
ஒருவனானேன்
கூனி குறுகி நிற்கிறது
என் மனசாட்சி,

கயவன் இவன் என தெரிந்தும்
கழுத்தை நெறித்தே
கொல்லாமல் விட்டதற்கு
என் பாலினம் எது..?என்று
சோதனை செய்ய சொல்கிறது
என் மனது..!

சாதி கொண்டாடும்
சாதி வேசிகளே,
ரத்ததானம் செய்துவிடாதீர்..!
உங்கள் சிவப்பு சாக்கடையை
எம் மக்கள்
ரத்தத்தோடு கலக்காதீர்...!

சாதி சுவாசிக்கும் பிண்டங்களே
மலம் உண்ணும் நாயும்..
காதல் உண்ணும் நீங்களும்..
வெவ்வேறா என்ன..?

காதலின் மயிர் போன்றது
உங்கள்  சாதி,..

தமிழனுக்கு  பிடித்துவிட்டால்
மயிரானாலும் உயிர்,
தமிழன் வெறுத்துவிட்டால்
உயிரானாலும் மயிர்..!!

மயிராய் நினைத்து
உயிரைவிட்டான் இளவரசன்
இளவரசன் குருதி குடித்த
சாதி ஓநாய்களே...,
எப்படி இருந்தது
காதலின் குருதி..,???

வீழ்த்தப்படவில்லை அவன்
தன்னைத்தானே
விதைத்திருக்கிறான்..,
சாதி அழிப்பிற்காக...!!

"தமிழனுக்கு  பிடித்துவிட்டால்
மயிரானாலும் உயிர்,
தமிழன் வெறுத்துவிட்டால்
உயிரானாலும் மயிர்"..!!

                                                - இளையபாரதி

Wednesday, 3 July 2013

காதல்


உடைந்து போன தன்
இதயத்திற்காக
வருந்தாமல்,
உடைத்துவிட்டு போன
இதயத்திற்காக
வருந்துகிறது,
எத்தனை வெகுளியானது
இந்த " காதல் "...!!

                                - இளையபாரதி